Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நீலகிரி வருகை; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நீலகிரி வருகை; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

By: Monisha Thu, 05 Nov 2020 10:04:09 AM

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நீலகிரி வருகை; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறார். பின்னர் அவர் ஊட்டியில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் காலை 11 மணியளவில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துகிறார். தொடர்ந்து ரூ.189.35 கோடியில் 67 முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை போன்ற துறைகள் சார்பில் ரூ.131.57 கோடியில் புதிதாக 123 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறார். ஆய்வு கூட்டம் நடைபெறும் தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

edappadi palanisamy,prevention,development,research,nilgiris ,எடப்பாடி பழனிசாமி,தடுப்பு பணிகள்,வளர்ச்சி பணிகள்,ஆய்வு,நீலகிரி

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மாளிகை வளாகம், ஆய்வு கூட்டம் நடைபெறும் அரங்கு, சமையல் கூடம், தங்கும் அறைகள், வரவேற்பு அறை உள்ளிட்ட இடங்களில் நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அரங்கில் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கைகள் வரிசையாக போடப்பட்டு உள்ளது. குப்பைகள், புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதுபோன்று கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலமும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்கிடையே முதல்- அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags :