Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக, கேரளா முதல்வர்கள் தேர்தலுக்காக சதி செய்கின்றனர்... பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக, கேரளா முதல்வர்கள் தேர்தலுக்காக சதி செய்கின்றனர்... பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 08 Mar 2023 10:27:48 AM

தமிழக, கேரளா முதல்வர்கள் தேர்தலுக்காக சதி செய்கின்றனர்... பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: முல்லை-பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு முதலமைச்சர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் 2024ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதலமைச்சரும். கேரள முதலமைச்சரும் இணைந்து சதி திட்டம் திட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது என்று பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சரை நன்றாகத் தூங்க விடுங்கள். நன்றாகத் தூங்கினால்தான் அவரால் தெளிவாகப் பேச முடியும். தமிழக அரசியலில் பிரிவினையைக் கொண்டு வந்த பெருமை திமுகவுக்குத்தான் உண்டு. இந்தியாவில் வடக்கு, தெற்கு, தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, கொங்கு எனக் கொண்டு வந்தது திமுக தலைவர்தான்.

‘தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதா?’ என்று நான் கேட்டால் என் மீது எப்.ஐ.ஆர். போடுகின்றனர். கமல்ஹாசன் நடித்த ஒரு படத்தில் எதைப் பார்த்தாலும் பயம் என்பது போல், முதலமைச்சருக்கு எதைப் பார்த்தாலும் பயம் இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

bjp growth,mullai periyar,coming time,elections,will not decrease ,பாஜக வளர்ச்சி, முல்லை பெரியாறு, வரும்காலம், தேர்தல், குறையாது

முதலமைச்சரின் பேரன் வயது தேஜஸ்வி யாதவுக்கு. அவர் தனது தந்தையின் தயவுடன் பீகாரின் துணை முதல்வராக உள்ளார். பேரன் வயதில் உள்ள ஒரு துணை முதல்வரின் சான்று வாங்குவது முதலமைச்சருக்கு பெருமை ஆகாது. அவரது அரசியல் தாழ்ந்து போய் உள்ளதைத்தான் இது காட்டுகிறது.

தேசிய அரசியல் என்றால் கே.சி.ஆர்., மம்தா, நிதிஷ்குமார், அரவிந்த் ஜெக்ரிவால் ஆகியோர் வந்திருக்க வேண்டும். இவர்களைப் பார்த்துதான் பா.ஜ.க. பயப்பட போகிறதா? மோடி ஆட்சியில் யாரைப் பார்த்தும் எங்கும் பயம் இல்லை. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். காலத்தில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்து இருந்தார்கள். இப்போது குழந்தைகளை அழைத்து வந்து பேசுவது தமிழக மக்களை அசிங்கப்படுத்துவதாக உள்ளது.

முல்லை-பெரியாறு அணை விவகாரத்தில் இரண்டு முதலமைச்சர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் 2024ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும் இணைந்து சதி திட்டம் திட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. தமிழகத்தைப் பற்றியோ, கேரளாவைப் பற்றியோ அவர்களுக்குக் கவலை கிடையாது. இந்திய அரசியலில் எம்.பி.க்கள் கிடைத்தால் டெல்லி சென்று பேரம் பேசலாம் என்பதற்காக இணைந்து உள்ளனர். அது போல்தான் வைகோவும்.

முன்பெல்லாம் திராவிடக் கட்சிகளை சார்ந்துதான் பா.ஜ.க. வளரும் என்கிற குற்றச்சாட்டு இருந்தது. தற்போது பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால்தான் திராவிடக் கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட நான் தலைவராக வரவில்லை. ஜெயலலிதா எப்படி ஒரு முடிவு எடுப்பாரோ அதுபோல்தான் எனது முடிவும் இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போவது வழக்கம்தான். அந்த வரிசையில் நானும் தலைவர்தான். வருங்காலத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகம் அதிகமாகதான் இருக்கும். குறையப் போவதில்லை” என அவர் கூறினார்.

Tags :