வெளிநாட்டில் இருந்து மனைவியை வரவழைக்க குழந்தைகளை கொடுமைப்படுத்தியவர் கைது
By: Nagaraj Mon, 14 Aug 2023 06:38:30 AM
நீலகிரி: குழந்தைகளை கொடுமைப்படுத்தினார்... வெளிநாட்டு வேலைக்குச் சென்ற மனைவியை வரவழைக்க பெற்றக் குழந்தைகளையே அடித்துக் கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து அனுப்பி மிரட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
அவர் மலேசியா சென்றது பிடிக்காததால், திரும்பி வருமாறு அவரது கணவர் ரவி பலமுறை அழைத்துள்ளார். இப்படி கணவனின் தொல்லை தாங்காமல், மகாலட்சுமி கடந்த 3 நாட்களாக, போனை எடுக்காமல் நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி, தனது நான்கு மற்றும் ஒன்றரை வயதுள்ள இரண்டு குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கியும், கழுத்தை நெரித்தும், சிலிண்டரை வெடிக்கச் செய்தும் கொன்று விடுவேன் என்று மிரட்டி அதை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
ரவி அனுப்பிய வீடியோவைப் பார்த்து அதிர்ந்துபோன மகாலட்சுமி, அதை உறவினர்களுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரவி கைது செய்யப்பட்டார்.