Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமானம் தாங்கி கப்பல்களை விரைவாக கட்டி முடிக்க சீனா நடவடிக்கை

விமானம் தாங்கி கப்பல்களை விரைவாக கட்டி முடிக்க சீனா நடவடிக்கை

By: Nagaraj Tue, 21 July 2020 4:14:56 PM

விமானம் தாங்கி கப்பல்களை விரைவாக கட்டி முடிக்க சீனா நடவடிக்கை

கப்பற்படை நடவடிக்கை... அமெரிக்காவுடன் போர் சூழல் உருவாகியுள்ளதாக, தான் கட்டிவரும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று சீன கப்பற்படை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

சீனாவிடத்தில் லியோனிங் என்ற பெயரில் விமானம் தாங்கிக் கப்பல் உள்ளது. ரஷ்ய தயாரிப்பான இந்த கப்பலை உக்ரைன்ன் நாட்டிலிருந்து சீனா வாங்கியது. பிறகு, உள்நாட்டிலேயே ஷான்டோங் என்ற பெயரில் விமானம் தாங்கிக் கப்பலை சீனா கட்ட தொடங்கியது. லியோனிங் மாகாணத்திலுள்ள டாலியான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட, ஷான்டோங் கப்பல் கடந்த டிசம்பர் மாதத்தில் சீன கடற்படையில் இணைக்கப்பட்டது.

லியோனிங் மற்றும் ஷான்டோங் விமானம் தாங்கிக் கப்பல்கள் 'ski-jump டேக் ஆஃப் தளத்தைக் கொண்டவை. விமானங்கள் எளிதாக மேலேழும்பிச் செல்லும் வகையில் கப்பலின் ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கும். விமானம் குறைந்த வேகத்திலேயே எளிதாக மேலே எழும்பிப் பறக்க முடியும். தற்போது, இந்த இரு விமானம் தாங்கிக் கப்பல்கள்தான் சீனாவிடத்தில் உள்ளன.

china,accelerators,navy,ships,usa ,
சீனா, விரைவுபடுத்துகிறது,  கடற்படை, கப்பல்கள், அமெரிக்கா

கடற்படையினை வலுப்பபடுத்த வேண்டிய அவசியத்தைப் புரிந்த கொண்ட சீனா, விமானம் தாங்கிக் கப்பல்கள் அதிகம் தேவை என்பதை உணர்ந்தது. இதனால், ஷாங்காயில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் மேலும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களைக் கட்டத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

வரும் 2023- ம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுமானத்தை முடித்து 2025- ம் ஆண்டுக்குள் சோதனை ஓட்டத்தை முடித்து கடற்படையில் இணைக்க சீன திட்டமிட்டிருந்தது. அதேபோல் 2018- ம் ஆண்டு நான்காவது விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் பணியை சீனா தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்தக் கப்பல்களின் கட்டுமானப் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவுடன் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது மற்றும் நான்காவது விமானம் தாங்கிக் கப்பல்கள் கட்டும் பணியை விரைவு படுத்த சீன கப்பற்படை உத்தரவிட்டுள்ளது.

இதில், மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை கட்டும் பணி இறுதிப் பகுதியை எட்டி விட்டதாகச் சொல்லப்படுகிறது. சீனா கட்டி வரும் இந்த இரு கப்பல்களும் அதி நவீனமானவை. சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 85,000 டன் எடை கொண்டது. (இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யா கப்பல் 45,000 டன் எடை) சீனாவின் இரண்டாவது உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டோங்கை விட மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் 15,000 டன் எடை அதிகம். 50 விமானங்களை இதிலிருந்து இயக்க முடியும்.

china,accelerators,navy,ships,usa ,
சீனா, விரைவுபடுத்துகிறது,  கடற்படை, கப்பல்கள், அமெரிக்கா

இந்தக் கப்பலின் ஓடு தளம் மற்ற விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து வேறுபட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது . அதாவது, இந்தப் போர்க்கப்பலில் மின்காந்த அலைகள் (electromagnetic catapults) மூலம் விமானத்தின் ஓடுதளம் இயக்கப்படும். உலகிலேயே அமெரிக்க கடற்படையில் உள்ள ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் ரக விமானம் தாங்கிக் கப்பல்களில் மட்டுமே இத்தகையை ஓடுதளம் உள்ளது.

electromagnetic catapults ஓடுதளத்தில் குறுகிய தொலவிலிருந்தே விமானங்களை மேலே எழும்ப வைத்து விடலாம். போர் விமானங்களால் அதிகபட்ச எடையுடன் எளிதாக மேலெழும்ப முடியும். போர் திறன்மிக்க, அதிக ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடிய போர் விமானங்களை இயக்க முடியும்.

அமெரிக்க கப்பற்படைக்கு சவால் கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பத்தையே சுட்டு தான் கட்டும் விமானம் தாங்கிக் கப்பல்களில் சீனா புகுத்தியுள்ளது. தற்போது, சீனாவில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால், இந்த விமானம் தாங்கிக் கப்பல்களை கட்டும் பணியை சீன கடற்படை துரிதப்படுத்தியுள்ளது.

அமெரிக்க கப்பற்படையில் 2017- ம் ஆண்டு இணைக்கப்பட்ட ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் 2020- ம் ஆண்டு இணைக்கப்பட்ட ஜான் எப். கென்னடி விமானம் தாங்கிக் கப்பல்கள் அதி நவீனமானவை. இதே ரகத்தில் என்டர்பிரைசஸ், டோரிஸ் மில்லர் ஆகிய மேலும் இரு கப்பல்களையும் அமெரிக்க கட்டி வருகிறது.

தற்போதைய நிலையில், அமெரிக்க கடற்படையில் 13 விமானம் தாங்கிக் கப்பல்கள் பணியில் உள்ளன. ஆனால், சீனாவிடம் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. மேலும், இரண்டைக் கட்டி வருகிறது. வரும் 2035- ம் ஆண்டுக்குள் மேலும் 2 விமானம் தாங்கிக் கப்பலைக் கட்ட சீனா முடிவெடுத்துள்ளது. ஆனால், எப்படி பார்த்தாலும் அமெரிக்க கடற்படையுடன் ஒப்பிடும் போது சீனாவின் கடற்படை வலு குறைந்தே உள்ளது.

Tags :
|
|
|