Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:51:48 PM

லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் இருதரப்பும் படைகளை திரும்ப பெற்று அமைதியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது.

இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது எனவும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அதன்பின் பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, லடாக்கில் சீனாவின் அத்துமீறலை கண்டித்தார்.

china,us intervention,ladakh issue,india ,சீனா, அமெரிக்க தலையீடு, லடாக் பிரச்சினை, இந்தியா

ஏற்கனவே தெற்கு, கிழக்கு சீனக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் குவாட் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் நிலையில், லடாக் விவகாரத்திலும் அமெரிக்காவின் இந்த இந்திய ஆதரவு நிலைப்பாடு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் லடாக் விவகாரம் இந்தியா-சீனா சம்பந்தப்பட்ட பிரச்சினை எனவும், இதில் அமெரிக்கா தலையிடக்கூடாது எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், சீனா மற்றும் இந்தியா இடையேயான எல்லை பிரச்சினை, இருநாட்டு விவகாரம். தற்போது எல்லை நெடுகிலும் பொதுவாக நிலைத்தன்மை நிலவுகிறது. அமெரிக்கா பரிந்துரைத்துள்ள இந்தோ-பசிபிக் யுக்தி என்பது காலாவதியான பனிப்போர் மனநிலையை பிரசங்கித்தல் ஆகும். அது மட்டுமின்றி மோதல் மற்றும் புவிசார் அரசியல் விளையாட்டை எடுத்துரைத்தலும் ஆகும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவதையே இது நோக்கமாக கொண்டிருக்கிறது. எனவே இதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.

Tags :
|