Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்; மத்திய மந்திரி தகவல்

கல்லூரிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்; மத்திய மந்திரி தகவல்

By: Monisha Wed, 23 Sept 2020 09:17:38 AM

கல்லூரிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்; மத்திய மந்திரி தகவல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. நோய்த்தொற்று குறையாததால் அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமலும் போனது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆன்லைனில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் முதல் ஆண்டு மாணவர்களை தவிர, இதர மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது கேள்விக்குறியாகவே நீடித்து வந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- "கொரோனா நோய்த்தொற்றையொட்டி 2020-21-ம் கல்வியாண்டில் முதல் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கால அட்டவணையை நிபுணர் குழு தயாரித்தது. அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்றுக்கொண்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

corona virus,colleges,first year students,undergraduate,postgraduate ,கொரோனா வைரஸ்,கல்லூரிகள்,முதல் ஆண்டு மாணவர்கள்,இளங்கலை,முதுகலை

அதன்படி, முதல் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ந் தேதிக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வகுப்புகள் 2-ந்தேதி அல்லது முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 2020-21-ம் கல்வியாண்டுக்கான கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வியாண்டு தொடங்குவதற்கான தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் விடுமுறைகளை குறைக்க வேண்டும் என்றும், அப்படி செய்யும்போது இந்த பேட்ச் மாணவர்கள் சரியான நேரத்தில் பட்டத்தை பெறுவார்கள் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு பணிகளும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற 25-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Tags :