Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எட்டு மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை

எட்டு மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை

By: Nagaraj Mon, 07 Dec 2020 9:04:17 PM

எட்டு மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, பல்வேறு தளர்வுகளுடன் இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்தனர்.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு, முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.

தொடர்ந்து அரசு உத்தரவின்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகள் மற்றும் விடுதிகள் இன்று முதல் திறக்கப்படுன்றன.

opening of colleges,guidelines,students,alumni ,கல்லூரிகள் திறப்பு, வழிகாட்டு நெறிமுறை, மாணவர்கள், மாணவிகள்

கல்லூரி வளாகம், வகுப்பறை என அனைத்து இடங்களிலும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை வலியுறுத்தப்பட்டு உள்ளது. உள் நுழையும் இடங்களில் வெப்பநிலை கணக்கிடும் கருவி, மாணவர்களை பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு கொரோனா இருந்தால் கண்டிப்பாக மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது. நேரடி வகுப்பு அல்லாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடங்களைக் கற்க விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என உயர்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வாரத்துக்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஆர்வமுடன் கல்வி கற்க மாணவ, மாணவிகள் வருகை தந்தனர்.

Tags :