Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமன்ற தேர்தல்: டார்ச்லைட் சின்னத்தை பெற சட்ட நிபுணர்களிடம் கமல் ஆலோசனை

சட்டமன்ற தேர்தல்: டார்ச்லைட் சின்னத்தை பெற சட்ட நிபுணர்களிடம் கமல் ஆலோசனை

By: Monisha Tue, 15 Dec 2020 2:24:36 PM

சட்டமன்ற தேர்தல்: டார்ச்லைட் சின்னத்தை பெற சட்ட நிபுணர்களிடம் கமல் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கினார். இதன்பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச்லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த சின்னத்தை கமல் கட்சியினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர்.

இதையடுத்து சட்டமன்ற தேர்தலிலும் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கும் கட்சிகளுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுவையில் மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சின்னம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் டார்ச்லைட் சின்னம் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கமல்ஹாசனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்படாததால் விரக்தியில் உள்ளனர். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி கமல்ஹாசன் சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருகிறார்.

assembly election,party,symbol,torchlight,consultation ,சட்டமன்றதேர்தல்,கட்சி,சின்னம்,டார்ச்லைட்,ஆலோசனை

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் அளித்துள்ள பேட்டி வருமாறு:- டார்ச்லைட் சின்னத்தை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக போராடினோம். இதற்காக டெல்லி சென்று முறைப்படி தேர்தல் ஆணையத்தில் மனுவையும் அளித்தோம்.

ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ‘டார்ச்லைட்’ சின்னத்தை ஒதுக்குவதற்கு மறுத்துள்ளனர். புதுவையில் எங்கள் கட்சிக்கு ‘டார்ச்லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒதுக்கப்படாதது ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. இதுபற்றி சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இதனை சவாலாக எடுத்துக் கொண்டு ‘டார்ச்லைட்’ சின்னத்தை பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் என குமரவேல் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|