தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரோனா பாதிப்பு
By: Monisha Thu, 04 June 2020 4:18:02 PM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தமிழக அரசு இணைய தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் மாணவர்கள் இணையதளம் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத தன்னுடைய பள்ளி இருக்கும் இடமான கொடைக்கானலுக்கு பெற்றோர்களுடன் காரில் சென்றார். அவர் கொடைக்கானல் சென்றடைந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என தெரியவந்தது.
இதனையடுத்து மாணவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமன்றி அவர் சென்ற காரின் டிரைவர் மற்றும் அவருடைய பெற்றோர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்வு எழுத கொடைக்கானல் சென்ற சென்னை மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.