Advertisement

சென்னையில் 10 பேருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

By: Nagaraj Thu, 10 Sept 2020 09:18:23 AM

சென்னையில் 10 பேருக்கு இரண்டாவது முறையாக கொரோனா

சென்னையில் பத்துக்கும் அதிகமானோருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபரின் உடலில் உள்ள நோய்த்தொற்று மாதிரிகள் ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய நோய்ப் பரவியல் தடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தீவிரமாகி வரும் கொரோனா பாதிப்புக்கு நாள்தோறும் சராசரியாக 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மற்றொரு புறம் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இரு மருத்துவர்கள் உள்பட 10 பேருக்கு நோய்த்தொற்று இரண்டாவது முறையாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

second time,10 people,corona. research institute ,இரண்டாவது முறை, 10 பேர், கொரோனா. ஆராய்ச்சி நிறுவனம்

அவர்கள் அனைவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அதற்கு அடுத்த சில நாள்களிலேயே காய்ச்சல், இருமல் பாதிப்பு இருந்ததால் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவேளை அவர்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைவதற்கு முன்பே வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அல்லது வீரியமிக்க நோய்த்தொற்றால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருப்பதாக நோய்த் தொற்று தடுப்பு மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள நோய்த்தொற்றின் மரபணுவை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தினால் மட்டுமே இதற்கான விடையை அறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இரண்டாவது முறை பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நபர்களின் நோய்த்தொற்று மாதிரிகள் மகராஷ்டிர மாநிலம், புனேவில் அமைந்துள்ள தேசிய நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags :