Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனிச்சிறப்பு பெற்ற சிறுமுகை பட்டுப்புடவைகள் ஊரடங்கால் தேக்கம்; உற்பத்தி விலைக்கே விற்பனை

தனிச்சிறப்பு பெற்ற சிறுமுகை பட்டுப்புடவைகள் ஊரடங்கால் தேக்கம்; உற்பத்தி விலைக்கே விற்பனை

By: Nagaraj Tue, 16 June 2020 09:44:18 AM

தனிச்சிறப்பு பெற்ற சிறுமுகை பட்டுப்புடவைகள் ஊரடங்கால் தேக்கம்; உற்பத்தி விலைக்கே விற்பனை

பட்டுப்புடவைகள் தேக்கம்... ஊரடங்கு காரணமாக சிறுமுகையில் கைத்தறி நெசவு தொழில் முடங்கி, ரூ.15 கோடி பட்டுப்புடவைகள் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வட்டாரப்பகுதி கைத்தறி நெசவு தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சிறுமுகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5,000 நெசவு தொழிலாளர் குடும்பங்கள் நெசவு தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றன.

கண்ணைப்பறிக்கும் கைத்தறி புடவைகள் தயாரிப்பதில் சிறுமுகை பகுதி தனி முத்திரை பதித்து வருகிறது. சிறுமுகை வட்டார பகுதியில் நெசவு தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு 19-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் உள்ளன.


small,stagnant,silk silk,manufacturers,linen ,சிறுமுகை, தேக்கம், பட்டுப்புடவை, உற்பத்தியாளர்கள், கைத்தறி

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெசவாளர்கள் தயாரிக்கும் கோரா, மென்பட்டுப்புடவைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களில் விற்பனை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுப்புடவைகளை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்து தங்களது மாநிலங்களிலுள்ள ஷோரூம்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு நாடு முழுவதும் சிறுமுகை கைத்தறி பட்டுப்புடவைகள் தனிச்சிறப்பு பெற்று பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விளங்கி வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு அறிவித்த கடந்த மார்ச் மாதம் முதல் சிறுமுகை வட்டார பகுதியில் கைத்தொழில் முடங்கி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டதால் கைத்தறி பட்டு புடவைகள் தயாரிக்க கர்நாடகாவில் இருந்து பட்டும், சூரத்தில் இருந்து ஜரிகையும் சிறுமுகை பகுதிக்கு வருவது முற்றிலும் நின்று போனது. மேலும் நெசவுத் தொழிலாளர்களுக்கு கைத்தறி பட்டுப்புடவைகள் தயாரிக்க பாவுப்பட்டு, ஊடைப்பட்டு ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களும், தனியார் நிறுவனங்களும் வழங்க முன்வருவதில்லை.

small,stagnant,silk silk,manufacturers,linen ,சிறுமுகை, தேக்கம், பட்டுப்புடவை, உற்பத்தியாளர்கள், கைத்தறி

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய நெசவு தொழிலாளர்கள், “சிறுமுகை மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் 5,000 நெசவு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மாதத்துக்குக் குறைந்தது 50,000 புடவைகளை உற்பத்தி செய்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியில் இருந்து இதுவரை புடவைகள் உற்பத்தி செய்யவில்லை. ஏற்கனவே உற்பத்தி செய்து இருந்த ரூ.15 கோடியில் புடவைகள் தேக்கம் அடைந்துள்ளன.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழிலாளர்களுக்கு அரசு முதல் மாதம் ரூ.1000 மற்றும் மூன்று மாதங்களுக்கு ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை வழங்கியது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் நெசவு தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 90 சதவிகிதம் பேருக்கு நிவாரண தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

கைத்தறி தொழில் தவிர மாற்று தொழில் எதுவும் தெரியாததால் கேள்விக்குறியான எங்களது வாழ்க்கையை எண்ணி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே நலிவடைந்து வரும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே, கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில் உற்பத்தி விலைக்கு விற்பது என்ற திட்டம் தொடங்கப்பட்டு, கைத்தறி பட்டுப்புடவைகளை உற்பத்தி விலைக்கே வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த விற்பனை நேற்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|