Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .. டிஜிபி சைலேந்திர பாபு

திருவண்ணாமலையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .. டிஜிபி சைலேந்திர பாபு

By: vaithegi Fri, 02 Dec 2022 5:53:17 PM

திருவண்ணாமலையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ..  டிஜிபி சைலேந்திர பாபு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.வருகிற 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையொட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மகாதீபத்தன்று திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் 27 ஆயிரம் பஸ்களிலும், 12 ஆயிரம் கார்களில் இருந்தும், ரெயில் மூலமும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்காக 59 இடங்கள் மாவட்ட நிர்வாகத்தினால் கண்டறியப்பட்டு உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பை கருதி தற்போது இருந்தே வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இந்த மாவட்டத்தில் முன்பு வேலை பார்த்த அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அந்தந்த பகுதியை சேர்ந்த குற்ற தடுப்பு போலீசார் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக இருந்து சந்தேகப்படும் நபர்களை கைது செய்து கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண கூடிய சாப்ட்வேர் மூலம் கேமராக்களிலும், கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

thiruvannamalai,police ,திருவண்ணாமலை,போலீஸார்

இன்று முதல் 8-ந்தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பணி திருவண்ணாமலையில் தொடரும். தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இந்த விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்

Tags :