Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே இரவில் அழிந்த தனு‌‌ஷ்கோடி; தமிழக வரலாற்றின் கருப்பு நாள்- 56 ஆண்டுகள் நிறைவு

ஒரே இரவில் அழிந்த தனு‌‌ஷ்கோடி; தமிழக வரலாற்றின் கருப்பு நாள்- 56 ஆண்டுகள் நிறைவு

By: Monisha Tue, 22 Dec 2020 1:08:34 PM

ஒரே இரவில் அழிந்த தனு‌‌ஷ்கோடி; தமிழக வரலாற்றின் கருப்பு நாள்- 56 ஆண்டுகள் நிறைவு

ஒரே நாள் இரவில் வர்த்தக நகரம் என்று அழைக்கப்பட்ட தனு‌‌ஷ்கோடி அழிந்த சம்பவம் ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தமிழக வரலாற்றில் ஓர் கருப்பு நாள். சிறந்த துறைமுக நகரம், யாத்திரை தலம் என பல்வேறு பெருமைகள் மிக்க நகரம்தான் தனு‌‌ஷ்கோடி. இந்தியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு எளிதில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட நகரமே தனு‌‌ஷ்கோடி. இவ்வாறு வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த தனு‌‌ஷ்கோடியில் 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் கொந்தளிப்பால் தனு‌‌ஷ்கோடி நகரமே அழிந்தது.

கடும் மழைக்கு மத்தியில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களும், மற்றவர்களும் தங்களை அழிக்க சீறி வந்த ஆழிப்பேரலையை பற்றி அறிந்திருக்கவில்லை. நள்ளிரவில் தங்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களையும் ஆழி பேரலை தனக்கு இரையாக்கி கொண்டது. அத்துடன் தனது ஆக்ரோ‌‌ஷத்தை நிறுத்தாமல் தொடர் மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல் என தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருந்தன.

கடலானது தனு‌‌ஷ்கோடி நகரத்தையே மூழ்கடித்துவிட்டது. 24-ம் தேதி காலையில் பார்த்தபோது தனு‌‌ஷ்கோடி பகுதியில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா என இரண்டு கடலும் ஒன்று சேர்ந்தது போல் காட்சி அளித்தது. இன்ப சுற்றுலாவாக ரெயிலில் தனு‌‌ஷ்கோடிக்கு வந்த 120 மாணவர்கள் பயணித்த ரெயில் தடம் புரண்டது. ரெயிலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கி பலியாகினர். கடல் நீர் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை காவு வாங்கியதுடன், கட்டிடங்களையும் நிர்மூலமாக்கிவிட்டது. சேதமடைந்த கட்டிடங்களாக தனு‌‌ஷ்கோடியே சின்னாபின்னமாகி கிடந்தது.

dhanushkodi,sea,port,extinction,black day ,தனு‌‌ஷ்கோடி,கடல்,துறைமுகம்,ஆழிப்பேரலை,கருப்பு நாள்

இந்த துயர சம்பவம் நடந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. 56 ஆண்டுகளை கடந்தும் இன்றும் மின்சாரம், மருத்துவ வசதி என எந்தவொரு வசதியும் இன்றி அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலால் அழிந்து போன தனு‌‌ஷ்கோடி பகுதி அதன் பின்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு பொது மக்கள் தங்குவதற்கும் அரசு தடை விதித்தது. இன்று வரையிலும் தனு‌‌ஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசை வீடுகளை அமைத்து தினமும் நாட்டுப்படகு, சிறிய வத்தைகளிலும் மீன் பிடிக்க சென்று வந்து அங்கு குடும்பத்தோடு வாழ்ந்துதான் வருகின்றனர்.

56 ஆண்டுகள் ஆனாலும் அழிந்து போன தனு‌‌ஷ்கோடியை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு கட்டிட சிதிலங்கள் அந்த சோக சம்பவத்தை நினைவுகூரும் வகையில் காட்சியளித்து வருகின்றன. தினமும் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு சென்று அந்த சிதிலங்களை பார்வையிட தவறுவதில்லை. தற்போது தனு‌‌ஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் சாலை வசதி உள்ளது. ஆனால், மீண்டும் வணிக நகரமாகவும், பாதுகாப்புக்குரிய இடமாகவும் தனு‌‌ஷ்கோடி மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

Tags :
|
|