திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லாததால் அதிருப்தி
By: Nagaraj Tue, 29 Sept 2020 9:20:36 PM
திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்பதால் திரைத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்ததுள்ளது. அக்டோபர் 31 வரையிலான இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகளில் இதுவரை 60 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 பேர் வரை அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்க அக்டோபர் 1 முதல் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் கூடிய இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தமிழக அரசின் அறிவிப்பில்
திரையரங்குகளுக்கு அக்டோபர் 31 வரை அனுமதி இல்லை என்று
அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பல்வேறு
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் திரையரங்குகள் திறக்க மட்டும் அனுமதி
அறிவிக்காதது ஏன் என்பது குறித்து திரைப்பட திரையரங்கு உரிமையாளர்கள்
தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்கள்
மட்டுமின்றி தயாராக இருக்கும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல்
இருக்கும் திரைப்படத்துறையினர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து
விரைவில் முதல்வர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரை
திரையரங்கு உரிமையாளர்களின் பிரதிநிதிகள் சந்திக்க இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகி உள்ளது