Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது; கூட்டணி குறித்து விவாதம்

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது; கூட்டணி குறித்து விவாதம்

By: Monisha Sat, 12 Dec 2020 1:13:41 PM

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது; கூட்டணி குறித்து விவாதம்

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அளித்த பேட்டியில், ‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளது என்றும், ஆனாலும் தேர்தல் கூட்டணி குறித்து கட்சித்தலைவர் விஜயகாந்த்தான் முடிவு எடுப்பார் என்றும்’ கூறி வருகிறார். தனித்து போட்டியிடும் அளவுக்கு தே.மு.தி.க. வலுவாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்தும் கருத்துகளை கேட்க உள்ளார்.

election,dmdk,secretary,meeting,coalition ,தேர்தல்,தேமுதிக,செயலாளர்,கூட்டம்,கூட்டணி

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- வருகிற சட்டசபை தேர்தல் தே.மு.தி.க.வுக்கு மிகவும் சவாலான தேர்தல் ஆகும். 2011-ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., அதற்கு அடுத்து நடைபெற்ற 2016-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி குறித்து சரியான முடிவெடுக்காத காரணத்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் சட்டசபையில் தே.மு.தி.க.வுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விட்டது. இதை கருத்தில் கொண்டு இந்த தேர்தலில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கேப்டன் விஜயகாந்த் கருத்து கேட்க இருக்கிறார். தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் மாறுபட்ட கருத்து இருந்து வருகிறது. இதுபற்றி நாளை நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த்திடம் எடுத்து சொல்வோம்.

தற்போது கிளை கழக அளவில் தே.மு.தி.க. வலுவாகத்தான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சிப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த எம்.பி. தேர்தல் போல் இல்லாமல் வருகிற தேர்தலில் தே.மு.தி.க. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கருதுகிறோம். கூட்டணி குறித்து விஜயகாந்த் எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு. அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆனாலும் எங்கள் கருத்துகளை தைரியமாக எடுத்து கூறுவோம் என அவர் கூறினார்.

election,dmdk,secretary,meeting,coalition ,தேர்தல்,தேமுதிக,செயலாளர்,கூட்டம்,கூட்டணி

தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியதாவது:- வருகிற தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் தேர்தல் களத்திற்கு வருவதால் போட்டி கடுமையாக இருக்கும். இந்த சூழலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் ஓட்டுகள் சிதறத்தான் செய்யும். வெற்றிபெறும் அளவிற்கு ஓட்டுகள் கிடைக்குமா என்பதை எல்லாம் யோசிக்க வேண்டி உள்ளது. எனவே அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால்தான் வெற்றி சுலபமாகும். அந்த வகையில் கணிசமான தொகுதிகளை கேட்டு வாங்கி தேர்தலில் நிற்பதுதான் சிறந்ததாக இருக்கும் என்பது எங்களது கருத்தாகும்.

தேர்தலில் போட்டியிடுவது என்பது வெற்றி பெறும் நோக்கத்தில்தான் அமைய வேண்டும். இவற்றை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தைரியமாக எடுத்து சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி தே.மு.தி.க.வுக்கு உள்ளது. மக்கள் மத்தியிலும் விஜயகாந்த்துக்கு தனி மரியாதை உள்ளது. அதை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கூட்டணியுடன் போட்டியிட்டால் நல்லது என்பதையும் வெளிப்படுத்துவோம் என அவர் கூறினார்.

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை விஜயகாந்த் கேட்டறிந்தாலும் கூட்டணி முடிவை உடனே அறிவிக்க மாட்டார் என தெரிகிறது. அடுத்த மாதம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அந்த கூட்டத்தில் மீண்டும் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில்தான் முடிவை தெரிவிப்பார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags :
|