Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஞ்சு விலை உயர்வால் திருப்பூரில் தொழில்கள் முடக்கம்... தொழில்துறையினர் கலக்கம்

பஞ்சு விலை உயர்வால் திருப்பூரில் தொழில்கள் முடக்கம்... தொழில்துறையினர் கலக்கம்

By: Nagaraj Mon, 05 Sept 2022 08:15:44 AM

பஞ்சு விலை உயர்வால் திருப்பூரில் தொழில்கள் முடக்கம்... தொழில்துறையினர் கலக்கம்

திருப்பூர்: தொழில்கள் முடங்கியது... பஞ்சு விலை உயர்வால் 70 சதவீத தொழில்கள் முடங்கியுள்ளதாக, திருப்பூர் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூருக்கு வந்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டுவரும் 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பார்வையிட்டார்.

ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற பெண்களை கவுரவித்தார். அதைத்தொடர்ந்து, தனியார் உணவகத்தில் தொழில் துறையினருடனான சந்திப்பு கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

இதில், தொழில்துறையினர் பேசும்போது, "பஞ்சு, நூல் விலை உயர்வால் நூற்பாலைகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த காலங்களில் வாரத்துக்கு 7 நாட்களும் வேலை இருந்தது. தற்போது, நூற்பாலைகளில் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நிலை உள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

cotton prices,rise,industrialists,tirupur,exports,stagnant ,பஞ்சு விலை, உயர்வு, தொழில்துறையினர், திருப்பூர், ஏற்றுமதி, முடங்கியது

காட்டன் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா கிளைகளை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் அமைத்து, பஞ்சு கொள்முதல் செய்து, தொழில்துறையினருக்கு சீரான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சு விலை உயர்வால் 70 சதவீத தொழில்கள் முடங்கியுள்ளன. பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

விசைத்தறி தொழிலை காக்க, பஞ்சு விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், பொது சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு காற்றாலை அல்லது சோலார் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதற்கு மானியம் வழங்க வேண்டும்.

தொழில்துறையினரின் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காணும் வகையில், பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும். பஞ்சு விலையை கட்டுப்படுத்தினால் விரைவில் திருப்பூர் முதலிடத்துக்கு வரும்" என்றனர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, "நாட்டின் பொருளாதாரத்தில் திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. பஞ்சு விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் பஞ்சு விலை உயர்த்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன், டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்றனர்.

Tags :
|