Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மொரோக்காவை உலுக்கிய நிலநடுக்கம்: பல மலைக்கிராமங்கள் கடும் சேதம்

மொரோக்காவை உலுக்கிய நிலநடுக்கம்: பல மலைக்கிராமங்கள் கடும் சேதம்

By: Nagaraj Sun, 10 Sept 2023 10:32:11 PM

மொரோக்காவை உலுக்கிய நிலநடுக்கம்: பல மலைக்கிராமங்கள் கடும் சேதம்

மொரோக்கோ: வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.

அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.

earthquake,people,death toll,airspace,aid ,நிலநடுக்கம், மக்கள், பலி எண்ணிக்கை, வான்வெளி, உதவிகள்

நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக அல்-ஹவுஸ் பிராந்தியத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் டரவ்டான்ட் பகுதியில் 452 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க பகுதிகளில் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 1,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

நில நடுக்கத்தால் பல மலை கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. அங்கு வீடுகள், கற்குவியலாக காட்சி அளிக்கின்றன. அங்கு மீட்புப்பணிகள் நடந்து வந்தாலும், தொலை தூரத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு அதிகமாக மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மொராக்கோவுக்கு பல்வேறு நாட்டினர் உதவிகளை வழங்கி வருகின்றனர். அண்டை நாடான அல்ஜீரியா மனிதாபிமான அடிப்படையில் தனது வான்வெளியில் மொராக்கோவுக்கு செல்லும் விமானங்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. மொராக்கோவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, தனது வான்வெளியை மொராக்கோ பயன்படுத்த தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|