Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இறுதி முடிவு எடுப்பதற்குள் அறிவிப்பு பேனர் வைத்ததால் அதிர்ச்சி

இறுதி முடிவு எடுப்பதற்குள் அறிவிப்பு பேனர் வைத்ததால் அதிர்ச்சி

By: Nagaraj Thu, 28 July 2022 10:03:55 AM

இறுதி முடிவு எடுப்பதற்குள் அறிவிப்பு பேனர் வைத்ததால் அதிர்ச்சி

சென்னை: அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு பேனர்... மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முறையான அனுமதி பெறாமல், மின்வாரிய அலுவலகங்களில், மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்புகள் வைக்கப்பட்டிருப்பது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள மின் வாரியம், இதற்கான பரிந்துரையை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. இதை முடிவு செய்யும் அதிகாரத்திலும், பொறுப்பிலும் ஆணையமே உள்ளது.வழக்கமாக இதுபோன்ற பரிந்துரை வரும்போது, மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, அதன்பின்பு ஆணையமே மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கும். இதில் மின் வாரியம் பரிந்துரைக்கும் மின் கட்டணத்தை, ஆணையம் அப்படியே ஏற்கலாம் அல்லது அதைக் குறைக்கலாம்; இல்லாவிடில், முற்றிலுமாகவே நிராகரிக்கலாம். இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தில் பெரும் குழப்பங்கள் உள்ளன.

இந்த மின் கட்டண உயர்வு தொடர்பான மின் வாரியத்தின் அறிவிப்பில், மின் கட்டண அளவை இரு மாதங்களுக்கு ஒரு முறையும், மின் கட்டண உயர்வை மாதம் ஒரு முறையும் கணக்கிட்டுப் பட்டியல் வெளியிட்டுள்ளது.அதாவது, 101லிருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, மாதத்துக்கு 27.50 ரூபாயும், 301- - 400 யூனிட்டுக்கு 147.50 ரூபாயும், 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மாதத்துக்கு 297.50 ரூபாயும், 600 யூனிட் பயனீட்டாளர்களுக்கு, 155 ரூபாயும், 700 யூனிட் பயனீட்டாளர்களுக்கு 275 ரூபாயும், 800 யூனிட் பயனீட்டாளர்களுக்கு 395 ரூபாயும், 900 யூனிட் பயன்படுத்துவோருக்கு 565 ரூபாயும் மாதத்துக்குக் கணக்கிட்டு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

people,dissatisfaction,electricity bill,raise,notice banner,final ,மக்கள், அதிருப்தி, மின் கட்டணம், உயர்வு, அறிவிப்பு பேனர், இறுதி

தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறைதான் மின் கட்டண பில் கணக்கிடப்படுகிறது. ஆனால் மின் அளவீட்டை இரு மாதங்களுக்குக் கூறி விட்டு, உயர்த்தப்படும் கட்டணத்தை ஒரு மாதமாகக் குறைத்துச் சொல்லி, மக்களை ஏமாற்றியுள்ளது மின் வாரியம். உதாரணமாக, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மாதத்துக்கு ரூ.297.50 வீதமாக ஒரு பில்லில் ரூ.595 கட்டணம் உயரவுள்ளது. ஆனால் ரூ.595 கட்டணம் உயருமென்று கூறாமல், மாதத்துக்கு ரூ.297.50 மட்டும் உயர்வதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, 600, 700, 800 மற்றும் 900 யூனிட்களைப் பயன்படுத்துவோருக்கு, முறையே ரூ.310, ரூ.550, ரூ.790 மற்றும் ரூ.1130 என்ற அளவில், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, குறைந்தபட்சம் 13 சதவீதத்திலிருந்து 53 சதவீதம் வரை கட்டணம் உயர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பில்லில் உயரும் தொகையில் பாதித் தொகையை மட்டும் குறிப்பிட்டு, 'மாதத்துக்கு' என்ற வார்த்தையை சாதுர்யமாகச் சேர்த்துள்ளது மின் வாரியம்.இதனால், ஆணையம் சார்பில் மக்கள் கருத்துக் கேட்கப்படும்போது, இதற்குக் கடும் எதிர்ப்பு வர வாய்ப்பு அதிகம். ஆணையம் இதுவரை இறுதி முடிவு எடுக்காத நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு பேனர்கள், அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்து விட்டதோ என்ற குழப்பத்தையும், அதிருப்தியையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

Tags :
|
|