Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேங்காய்திட்டு முகத்துவார கட்டமைப்பை மாற்றி அமைக்க வலியுறுத்தல்

தேங்காய்திட்டு முகத்துவார கட்டமைப்பை மாற்றி அமைக்க வலியுறுத்தல்

By: Nagaraj Fri, 02 Sept 2022 4:13:01 PM

தேங்காய்திட்டு முகத்துவார கட்டமைப்பை மாற்றி அமைக்க வலியுறுத்தல்

புதுச்சேரி: ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவு செய்வதற்கு பதில், சில லட்சம் ரூபாய் செலவு செய்து புதுச்சேரி தேங்காய்திட்டு முகத்துவார கட்டமைப்பை அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் கடந்த 15.10.2003ல் திறக்கப்பட்டது. இங்கு மீன் ஏலக்கூடம், படகு பழுது பார்க்கும் தளம், மீனவர் தகவல் மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த துறைமுகத்தில் இருந்து, 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிற்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியை இந்த துறைமுகம் அளித்து வருகிறது.சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட துறைமுக முகத்துவாரம் அடிக்கடி துார்ந்துபோய் விடுகிறது.

இதனால், மீனவர்களின் படகுகள், கடலுக்கு செல்லும்போது முகத்துவாரம் மண் திட்டில் சிக்கி, தரை தட்டி சேதமடைகிறது. சில நேரம் கரையோர பாறைகள் மீது மோதி படகு பழுதாகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து துார் வாரினாலும், ஓரிரு மாதத்தில் துார்ந்துபோய், மீண்டும் மண் திட்டு உருவாகி விடுகிறது. மெகா சைஸ் டிரஜ்ஜிங் இயந்திரம், ஜே.சி.பி., மூலம் மணல் அள்ளினாலும் முகத்துவாரத்தை முழுமையாக துார்வார முடியவில்லை.

expert panel,review,fisheries,annually,cost,framework ,
நிபுணர் குழு, ஆய்வு, மீன்வளத்துறை, ஆண்டுதோறும், செலவு, கட்டமைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் முகத்துவாரம் துார்ந்தது. மண் திட்டு காரணமாக முகத்துவாரத்தில் தண்ணீர் ஆழம் 3 அடிக்கும் குறைவாக இருப்பதால், சில இடங்களில் ஆற்றில் ஆட்கள் இறங்கி நடந்து செல்கின்றனர்.இதனால், பெரும்பாலான மீன்பிடி படகுகள் அச்சத்துடன் கடலுக்கு சென்று திரும்புகின்றன. சிறிய படகுகளும் கடும் சிரமத்துடன் கடலுக்கு செல்கின்றன.

தேங்காய்திட்டு துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்தி, ஆழப்படுத்த துறைமுகத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் இறுதி செய்யும் பணியை தற்போது முடுக்கி விட்டுள்ளது. தேங்காய்திட்டு துறைமுகத்தில் ஆழ்கடல் படகுகள் நிற்கும் பகுதியில், 41 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணல் துார்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மணலை மூன்று மாதத்திற்குள் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த துறைமுகம் அடிக்கடி துார்ந்துபோய் விடுவதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடி துறைமுக முகத்துவார கட்டமைப்பை மறு சீரமைத்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என மீனவர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவு செய்வதற்கு பதில், சில லட்சம் ரூபாய் செலவு செய்து தேங்காய்திட்டு முகத்துவார கட்டமைப்பை அரசு மாற்றி அமைக்க வேண்டும். இது தொடர்பாக துறைமுகத் துறையும்,மீன்வளத் துறையும் நிபுணர் குழுவை நியமித்து ஆய்வு நடத்த வேண்டும்' என்றனர்.

Tags :
|
|