Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் அமைப்பு வழங்கிய போலி கௌரவ டாக்டர் பட்டம்... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார்

தனியார் அமைப்பு வழங்கிய போலி கௌரவ டாக்டர் பட்டம்... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார்

By: Nagaraj Thu, 02 Mar 2023 11:12:37 AM

தனியார் அமைப்பு வழங்கிய போலி கௌரவ டாக்டர் பட்டம்... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார்

சென்னை: போலி கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்த தனியார் அமைப்புக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் சிலருக்கு தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் அண்மையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இந்தப் பிரபலங்கள் பட்டியலில் இசையமைப்பாளர் தேவா, நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடன இயக்குநர் சாண்டி மற்றும் யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு வர முடியாத சூழலில் இருந்த வடிவேலுவுக்கு அவரின் வீடு தேடிச் சென்று கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தனர் அந்த தனியார் அமைப்பினர். இந்நிலையில் அந்தத் தனியார் அமைப்பின் மூலம் கொடுக்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்ட நிகழ்ச்சியே போலி என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

vadivelu,honorary doctor,fake,anna university,no admission ,வடிவேலு, கௌரவ டாக்டர், போலி, அண்ணா பல்கலை, அனுமதி கிடையாது

அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பு ஒன்று வழங்கிய போலி கௌரவ டாக்டர் பட்டம் தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளோம். போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தத் தனியார் அமைப்பினர் தாங்கள் கொடுத்த போலி பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைக் கழக அரங்கத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகம் புனிதமான இடம். இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்காக வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் அளித்ததாகக் கூறியதால் அந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி அளித்தோம். அவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னதால் வந்திருப்பார் என்று தோன்றுகிறது.

நிகழ்ச்சியை நடத்திய தனியார் அமைப்புக்கும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இனி, அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் எந்த தனியார் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது” என்று அவர் கூறினார்.

Tags :
|