Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

By: Nagaraj Wed, 25 Nov 2020 9:52:13 PM

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

வானிலை ஆய்வு மையம் தகவல்... தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல், சென்னைக்கு 300 கிலோமீட்டர் தென்கிழக்கிலும், கடலூருக்கு 240 கிலோ மீட்டர் மற்றும் புதுச்சேரிக்கு 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறும். இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை, தமிழக-புதுச்சேரி கடலோரத்தில் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

fishermen,re-announcement,weather center,warning,pondicherry ,
மீனவர்கள், மறு அறிவிப்பு, வானிலை மையம், எச்சரிக்கை, புதுச்சேரி

அப்போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலும், சில நேரம் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசும். அத்துடன் இன்றும் நாளையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரும்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்கலில் இருந்து நாளை காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். தென் கடலோர மாவட்டங்களில் அதன் வேகம் மணிக்கு 85 கிலோ மீட்டர் வரை இருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாவட்டங்களில் காற்றின் வேகத்தால், குடிசை வீடுகள் மற்றும் பழைய வீடுகள் சேதமடைய வாய்ப்புள்ளது. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், விவசாயப் பயிர்களுக்கும் இந்த புயலால் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடல் அலைகள் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு எழும்பக்கூடும். எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது.

Tags :