Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெகிழ வைத்த சிறுவர்கள்... சேமிப்பு பணத்திலிருந்து முகக்கவசங்கள் வாங்கி கொடுத்து அசத்தல்

நெகிழ வைத்த சிறுவர்கள்... சேமிப்பு பணத்திலிருந்து முகக்கவசங்கள் வாங்கி கொடுத்து அசத்தல்

By: Nagaraj Fri, 19 June 2020 1:38:23 PM

நெகிழ வைத்த சிறுவர்கள்... சேமிப்பு பணத்திலிருந்து முகக்கவசங்கள் வாங்கி கொடுத்து அசத்தல்

தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.7 ஆயிரத்திலிருந்து ஆயிரம் முகக்கவசங்கள் வாங்கி கலெக்டரிடம் ஒப்படைத்து ஏழை மக்களுக்கு வழங்க கூறி அசத்தி உள்ளனர் சிறுவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன்கள் தர்ஷன் (10), பிரணவ் (9). இதில், தர்ஷனுக்குப் பார்வைக் குறைபாடு உள்ளது. சிறுவயதிலேயே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட இருவரும் பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தைச் சேமித்து வைத்திருந்தனர்.

தற்போதைய கொரோனா காலத்தில் முகக்கவசம் வாங்க முடியாதவர்களுக்கும் முகக்கவசம் கிடைக்கும் வகையிலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுவர்கள் இருவரும் தங்களது சேமிப்புப் பணம் ரூ.7,000-க்கு 1,000 முகக்கவசங்கள் வாங்கிச் சென்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் கையில் ஒப்படைத்து நெகிழ வைத்தனர்.

facepiece,boys,saving money,collector ,முகக்கவசம், சிறுவர்கள், சேமிப்பு பணம், கலெக்டர்

இதுகுறித்து சிறுவர்களின் தந்தை பாஸ்கர் கூறுகையில, எதுக்கு காசு சேமிச்சு வைக்கிறீங்கன்னு கேட்டால், எங்க மேல்படிப்புக்கு உங்கள கஷ்டப்படுத்த மாட்டோம். இந்தச் சேமிப்புப் பணத்தை வச்சே படிச்சிக்குவோம்னு சொல்வாங்க. அப்போ வழக்கத்தைவிட கூடுதலாகக் காசு கொடுக்கணும்னு தோணும். ஊரடங்கு நேரத்தில் தொடர்ச்சியாக 51 நாள் எங்களால் முடிஞ்ச அளவிற்கு வீட்டிலேயே சாப்பாடு செஞ்சு ஆதரவற்றோர், ஏழை எளியோருக்குக் கொடுத்தோம்.

கபசுரக் குடிநீர் கொடுத்தோம். இந்த நேரத்தில்தான் முகக்கவசம் இல்லாம, வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்னு கலெக்டர் அறிவித்த செய்தியைப் பார்த்த சின்ன பையன், நாங்க சேமிச்சு வச்சிருக்க பணத்தில் இருந்து முகக்கவசம் வாங்கிக் கொடுப்போம்னு சொன்னான். பிள்ளைகளுடைய ஆர்வத்தைப் பார்த்து உடனே ஓகே சொல்லிட்டேன்.

மொத்தமாக 7,000 ரூபாய் பணத்தை வச்சு 1,000 முகக்கவசம் வாங்கினோம். அவற்றை கலெக்டர்கிட்ட கொடுத்திட்டோம். அவங்களும் உரியவர்களிடம் கொண்டு போய் சேர்த்திட்டாங்க. பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இதுபற்றி கூறிய மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, "சிறு வயதிலேயே இதுபோன்ற ஆர்வம் மற்றும் சேவை மனப்பான்மையுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்றுதான் இருக்க வேண்டும். சிறுவர்கள் கொடுத்த முகக்கவசங்கள், ஏழை எளியோர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Tags :
|