Advertisement

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By: Nagaraj Thu, 04 Aug 2022 10:05:31 AM

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால் அணைக்கு வரும் 2,800 கன அடி நீரும் பிரதான மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தொடர் கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 1,370 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடிகளில் 42.15 அடிகள் நீர் உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,308 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. இதன் காரணமாக அந்த 10 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சத்துக்கும் மேல் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஈரோடு மாவட்ட காவேரி கரை முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் அதிகரித்து வரும் தண்ணீரால் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வருவாய் துறையினர் தாழ்வான பகுதியில் இருந்த 230 பேர் பாதுகாப்பாக மீட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags :
|