தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி...அமைச்சர் தகவல்
By: Monisha Sat, 05 Sept 2020 3:56:57 PM
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. கல்வி நிலையங்கள், திரையரங்குகள், தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-
கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து செயல்பாடு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது 7-ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், திரையங்கங்கள் திறப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். நாளை மறுநாள் திரைத்துறையினருடன் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.