Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏழுபேர் விடுதலை குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

ஏழுபேர் விடுதலை குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

By: Nagaraj Thu, 30 July 2020 11:39:10 AM

ஏழுபேர் விடுதலை குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

ஏழுபேர் விடுதலை தொடர்பாக பன்னோக்கு விசாரணை முகமை அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் பதில் அளித்து இருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏழு பேரின் விடுதலை தொடர்பாகத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.

இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 22ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

seven released,court,governor,responding,government of tamil nadu ,
ஏழு பேர் விடுதலை, நீதிமன்றம், ஆளுநர், பதில் அளித்து, தமிழக அரசு



எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஏழு பேர் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது பற்றியும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு அதே அமர்வில் நேற்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என ஆளுநர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக, தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருகிறது. ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க அதன் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, பேரறிவாளனுக்கு பரோல் கோரி கடந்த மாதமே விண்ணப்பித்த நிலையில், இதுவரை அதுகுறித்து முடிவெடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருப்பதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தைத் தேவையின்றி வீணாக்குவதற்கு அபராதம் விதிக்கலாமா என்ற கேள்வியையும் எழுப்பினர்.

இதுதொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியதையடுத்து, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதிகள் வழக்கைத் தள்ளிவைத்தனர்.

Tags :
|