Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ள பாதிப்பிலிருந்து விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம் கடலூர் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

வெள்ள பாதிப்பிலிருந்து விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம் கடலூர் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

By: Monisha Mon, 07 Dec 2020 2:32:09 PM

வெள்ள பாதிப்பிலிருந்து விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம் கடலூர் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

கடலூர் மாவட்டம் காலம் காலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் போதிலும், அதற்கு இன்று வரை நிரந்தரத் தீர்வு காணப்படாதது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களாக பெய்து வரும் மழை இன்னும் ஓயாத நிலையில், மாவட்டத்தின் பெரும்பகுதியை சூழ்ந்திருக்கும் மழை வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. கடலூர் மாவட்டம் காலம் காலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் போதிலும், அதற்கு இன்று வரை நிரந்தரத் தீர்வு காணப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், புரெவி புயல் ஆகிய இரு புயல்களாலும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர் மாவட்டம். நவம்பர் மாத இறுதியில் தாக்கிய நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்படுவதற்கு முன்பே, புரெவி புயல் பாதிப்புகள் தொடங்கிவிட்டன. டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் பெய்த மழை நேற்று சற்று ஓய்ந்திருந்தது. ஆனால், இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் வெள்ளம் வடியவில்லை.

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மக்களுக்கு முகாம்களுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் தங்களின் ஊர்களில் கிடைத்த இடத்தில் தங்கியுள்ளனர். கடலூர் முழுவதும் உள்ள அனைத்து குடிசைகளும் இப்போது சேதமடைந்து விட்டன. அதற்கு மாற்றாக மீண்டும் குடிசைகள் அமைக்க நிதி உதவி அளிப்பதற்கு பதிலாக, குடிசைகள் இல்லாத கடலூர் மாவட்டம் அமைக்கும் நோக்குடன் குடிசைகளை இழந்த அனைவருக்கும் கான்க்ரீட் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

cuddalore,flood,damage,pain,default ,கடலூர்,வெள்ளம்,பாதிப்பு,வேதனை,இயல்புநிலை

கடலூர் மாவட்டத்தில் தான் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, தென்பெண்ணை ஆறு ஆகிய ஐந்து ஆறுகள் கடலில் கலக்கின்றன என்பதால் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான வீராணம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் உள்ளிட்டவை பெருமாள் ஏரியில் கலப்பதாலும், அதனால் பெருமாள் ஏரி நிரம்பி பரவனாற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடும் போது, அந்த நீர் தடையின்றி ஓட வழியில்லாததாலும் தான் பல கிராமங்களில் வெள்ளம் ஏற்படுகிறது.

அதற்கு முடிவு கட்டும் வகையில் பரவனாற்று நீர் கடலில் எளிதாக கலப்பதை உறுதி செய்வதற்காக ‘‘அருவா மூக்கு’’ திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பெருமாள் ஏரியில் வெள்ளம் ஏற்படுவதற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தான் முக்கியக் காரணம் என்பதால், அந்த ஏரியை பராமரிக்கும் பொறுப்பையும், அதற்கான செலவையும் அந்நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வெள்ளம் ஏற்பட்டாலும், அதிலிருந்து விரைவாக மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் மாவட்டம் கடலூர் மாவட்டம் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|
|