இருநாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை கன்னியாகுமரி வருகை
By: vaithegi Sun, 23 July 2023 10:36:54 AM
நாகர்கோவில்: நாளை கன்னியாகுமரி வருகிறார் ஆளுநர் ... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஜூலை 24) இருநாள் பயணமாக குடும்பத்துடன் கன்னியாகுமரி வருகிறார். நாளை மாலை கன்னியாகுமரி வரும் அவர், சூரிய அஸ்தமனக் காட்சியைக் கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர், நாளை இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்.
அதனையடுத்து மறுநாள் (ஜூலை 25) கடல் நடுவே அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று, தியானம் செய்கிறார். அதன் பின்னர் பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆகியவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து, விவேகானந்தா கேந்திராவுக்குச் செல்லும் ஆளுநர் ரவி, கேந்திரா வளாகத்தில் உள்ள பாரத மாதா கோயில், ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.
இதனை அடுத்து மதியம் 2 மணியளவில் அவர் சென்னை புறப்படுகிறார். எனவே ஆளுநர் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.