Advertisement

மிலாடி நபி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

By: vaithegi Wed, 27 Sept 2023 6:08:25 PM

மிலாடி நபி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

c
சென்னை: மிலாடி நபி பண்டிகையையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து ...முதல்வர் ஸ்டாலின்: "அண்ணல் நபிகளாரின் நற்போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மிலாடி நபி நன்னாள் நல்வாழ்த்துகள். என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் உற்ற தோழனாக - உரிமைப் பாதுகாவலனாக விளங்கும் திமுக அரசுதான், அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியருக்கு மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை நல்கி, தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலன் காத்து நிற்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்: "அன்பு இருந்தால் தான் பிறர்க்கு உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகம் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த மிலாடி நபி வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்து உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: "அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: "அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழகத்தில் மிலாடி விழாக்களில் பங்கேற்று நபிகள் பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து மத நல்லிணக்கத்துக்கு வலுவூட்டும் வகையில் செயல்பட்டனர். உலகெங்கும் வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாளான மிலாடி நாளில் இனிய வாழ்த்துகளைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: "நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

greetings,milady nabi ,வாழ்த்து,மிலாடி நபி

விசிக தலைவர் திருமாவளவன்: சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம். இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல் வாய்ந்த மகானின்
பிறந்தநாளான 'மிலாடி நபி' திருநாளை "உலக சகோதரத்துவ நாளாக" கடைபிடிப்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் மிலாடி நபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: "நபிகள் நாயகம் போதித்ததையெல்லாம் ஒட்டுமொத்த உலகமும் அமைதி தவழும் அன்பு இல்லமாக மாறும். அதனை செய்வது தான் அனைவரின் கடமையும் ஆகும். அதன்படி அவரது போதனைகளை பின்பற்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதி, வளம், மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்ததாக மாற்ற உறுதியேற்போம்" என கூறியுள்ளார்.

மேலும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சமாதானமும் சகோதரத்துவமும் தவழவேண்டும் என்ற அண்ணல் நபிகளின் போதனைகளை ஏற்று அவரது வழியில் அயராது உழைத்திட உறுதியேற்போம். உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிலாடி நபி வாழ்த்துக்களை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன், என்று அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags :