கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியீடு
By: Karunakaran Wed, 26 Aug 2020 2:59:47 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக நீட் தேர்வை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா முழுவதும் மார்ச் மற்றும் ஏப்ரலில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
தேர்வு எழுத ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்புயுள்ளனர். ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் கொரோனா வைரஸ் குறைந்துவிடும். அதன்பின் தேர்வை நடத்தலாம் என மத்திய தேர்வு முகமை நினைத்திருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நவம்பர், டிசம்பர் மாதம் வரை இப்படித்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது தேர்வு நடத்திட மத்திய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட[போது, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மத்திய தேர்வு முகமை இன்று ஹால்டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,843 மையத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா போன்ற மாநில முதல்வர்கள் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.