Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊட்டி மற்றும் கூடலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி மற்றும் கூடலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By: Monisha Tue, 22 Sept 2020 10:18:54 AM

ஊட்டி மற்றும் கூடலூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரத்தில் போடப்பட்டு இருந்த பெட்டி கடை தூக்கி வீசப்பட்டு கிடந்தது. ஊட்டியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடுங்குளிர் நிலவியது.

ooty,cuddalore,hurricane winds,rain,cold ,ஊட்டி,கூடலூர்,சூறாவளி காற்று,மழை,கடுங்குளிர்

இந்த நிலையில் கூடலூரில் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நேற்று கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.

தொடர்ந்து சூறாவளி காற்றும், பலத்த மழையும் காணப்படுவதால் மின்வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குந்தா, கெத்தை, எமரால்டு, அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

Tags :
|
|