Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக உயர்கல்வித்துறை விளக்கம்

கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக உயர்கல்வித்துறை விளக்கம்

By: Monisha Tue, 28 July 2020 09:57:43 AM

கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக உயர்கல்வித்துறை விளக்கம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், கல்லூரிகளில் படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தவிர, மற்ற செமஸ்டர் தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக கடந்த 23-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பான விரிவான அறிவிப்பை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பு, முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு, முதலாம், 2-ம், 3-ம் ஆண்டு இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, முதலாம் ஆண்டு முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, முதலாம் மற்றும் 2-ம் எம்.சி.ஏ. படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த பருவத்துக்கு(செமஸ்டர்) மட்டும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகிலஇந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது.

college,semester exam,score,higher education,university ,கல்லூரி,செமஸ்டர் தேர்வு,மதிப்பெண்,உயர்கல்வித்துறை,பல்கலைக்கழகம்

இந்த மாணவர்களுக்கு சில வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் வழங்கப்பட இருக்கிறது. அதாவது சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அகமதிப்பீடு அல்லது தொடர்ச்சியான அக மதிப்பிட்டில் இருந்து 70 சதவீதமும் மதிப்பெண்களை என மொத்தம் 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மை பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்களுக்கு 100 சதவீதம் அகமதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும். செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத்தேர்வுகளை (அரியர்) பின்னர் எழுதவேண்டும்.

தொலைதூரக் கல்வியை பொறுத்தவரையில் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும். தொலைதூரக்கல்வியில் எங்கெல்லாம் அகமதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று அவர்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளலாம். கொரோனா தொற்றால் உள்ள கடினமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|