Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - மிதாலிராஜ்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - மிதாலிராஜ்

By: Karunakaran Sun, 09 Aug 2020 12:36:32 PM

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - மிதாலிராஜ்

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடக்கவிருந்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 5 அணிகள் இந்த போட்டியில் விளையாட தகுதி பெற்று இருந்தன. எஞ்சிய 3 இடத்துக்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தகுதி சுற்று தள்ளிப்போனது.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பெண்கள் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தள்ளிவைப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று முன்தினம் அறிவித்தது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையும், வர்ணனையாளருமான லிசா தனது டுவிட்டர் பக்கத்தில், அடுத்த ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெறலாம் என்று திட்டமிட்டிருந்த மிதாலிராஜ், ஜூலன் கோஸ்வாமி,ரேச்சல் ஹெய்ன்ஸ் போன்ற வீராங்கனைகள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

women world cup,cricket tournament,mithaliraj,indian cricketer ,பெண்கள் உலகக் கோப்பை, கிரிக்கெட் போட்டி, மிதாலிராஜ், இந்திய கிரிக்கெட் வீரர்

தற்போது இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் 37 வயது மிதாலி ராஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நிச்சயமாக உலக கோப்பை மீது எனது பார்வையை பதித்து இருக்கிறேன். 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்திய வேகப்பந்துவீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி இதுகுறித்து கூறுகையில், அடுத்த ஆண்டு உலக கோப்பை போட்டி நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இதற்காக நான் நீண்ட காலமாக கவனம் செலுத்தி வந்தேன். தற்போது இதனை எல்லாம் தாண்டி சிந்திக்க வேண்டி உள்ளது.தற்போது 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடுவதே எனது இலக்காகும். உலக கோப்பைக்கான அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.


Tags :