Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் கட்சி தொடங்கப்போவதில்லை - நடிகர் ரஜினிகாந்த் அதிரடி

நான் கட்சி தொடங்கப்போவதில்லை - நடிகர் ரஜினிகாந்த் அதிரடி

By: Karunakaran Tue, 29 Dec 2020 1:24:10 PM

நான் கட்சி தொடங்கப்போவதில்லை - நடிகர் ரஜினிகாந்த் அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். தினமும் கொரோனா கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது,

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை, இதை ஆண்டவன் பார்க்கிறேன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கை.
120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது, இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

party,actor rajinikanth,election,tamilnadu ,கட்சி, நடிகர் ரஜினிகாந்த், தேர்தல், தமிழ்நாடு

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள். கடந்த நவம்பர் 30 - ம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக 'உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே' என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|