Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காமராஜரின் தோல்வி எனக்கு மகிழ்ச்சியல்ல... அண்ணாவின் உயர்ந்த குணம்

காமராஜரின் தோல்வி எனக்கு மகிழ்ச்சியல்ல... அண்ணாவின் உயர்ந்த குணம்

By: Nagaraj Fri, 15 Sept 2023 6:14:41 PM

காமராஜரின் தோல்வி எனக்கு மகிழ்ச்சியல்ல... அண்ணாவின் உயர்ந்த குணம்

சென்னை: காமராஜரின் தோல்வி எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதல்ல. அரசியல் வானத்தில், இன்னொரு தமிழன், பெருந்தலைவர் காமராஜர் அளவிற்கு உயருவதற்கு இன்னும் ஆயிரமாண்டுகள் ஆகும்' எனக் கூறினார்.

அண்ணாவின் தலைமையிலான தி.மு.க.விற்கும், ராஜாஜியின் தலைமையிலான சுதந்திரா கட்சிக்கும் 1967 பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக கூட்டணி ஏற்பட்டது. 1966-ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் பெரும் மழையால், சென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. அன்றைய தி.மு.க. சென்னை மேயர் மைனர் மோசஸþம், நானும் அண்ணாவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் செய்வதற்காக அவருடைய இல்லத்திற்குச் சென்றோம். அண்ணா சற்று தயக்கம் காட்டி, "நேற்றைய தினமே முதலமைச்சர் பக்தவத்சலம் பார்வையிட்டதற்குப் பிறகு, நான் ஏன் வரவேண்டும்?' என வினவினார்.

எல்லாரும் மவுனமாக இருந்தனர். நான் உடனடியாக "அய்யா, நேற்று, இன்றைய முதல்வர் பார்வையிட்டார், இன்று, நாளைய முதல்வர் நீங்கள் பார்வையிடுகிறீர்கள்' என்று கூறியதும் வருகிறேன் என்றார். பிறகு நாங்கள் அனைவரும் அண்ணா தலைமையில் வியாசர்பாடி பகுதியையும், ஆதி ஆந்திரர்கள் வசிக்கும் பகுதியையும் பார்வையிட்டோம். நான் அங்குள்ள மக்களிடத்தில் தெலுங்கு மொழியில் பேசி, அங்குள்ள ஆதி ஆந்திர மக்களை, அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி, அண்ணாவின் பாராட்டுகளைப் பெற்றேன்.

1967-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வந்தது. சென்னையிலுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில், ஒரு தொகுதி மட்டும் (பூங்கா நகரம்) சுதந்திரா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு ராஜாஜி , கம்தார் என்பவரை வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்திருந்தார். இதனை அறிந்த அண்ணா, ராஜாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "உங்களுக்குத் தரப்பட்ட தொகுதி ஆதி திராவிடர் மக்கள் நிறைந்த பகுதி. ஹெச்.வி. ஹண்டேவிற்கு அறிமுகமானவர்கள். கடுமையான உழைப்பாளியான ஹண்டேவை அங்கு நிற்க வைத்தால், நம்முடைய கூட்டணிக்கு சென்னையில் முழுமையானவெற்றி கிடைத்து விடும்' எனக் கூறினார்.

no happiness,anna,kamaraja,failure,millennium ,மகிழ்ச்சியல்லை, அண்ணா, காமராஜர், தோல்வி, ஆயிரமாண்டு

திடீரென ராஜாஜி என்னை அழைத்து, "பூங்கா நகர் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?' எனக் கேட்டார். நான், "அய்யா, எனக்கு பதவி இன்னும் மூன்றாண்டுகள் உள்ளது' எனக் கூறினேன்." அது எனக்குத் தெரியும். உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புள்ளதாக அண்ணா கருதுகிறார். மக்களின் நாடி அண்ணாவிற்கு நன்கு தெரியும். நீங்கள் உடனடியாக பூங்கா நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யுங்கள்' என ராஜாஜி கூறினார்.

காங்கிரஸ் கோட்டையாக இருந்த பூங்கா நகர் தொகுதியிலிருந்து நான் 2,854 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். மதியம் 1 மணிக்கு அண்ணா இல்லத்திற்குச் சென்றேன். அவரை கவுரவப்படுத்துவதற்காக நான் கொண்டு சென்ற மாலையை, அண்ணா வாங்கி என் கழுத்தில் போட்டார்.

திடீரென வெளியில் பட்டாசு சத்தம் கேட்டது. அண்ணா வெளியே வந்து, "எதற்காக இந்த பட்டாசு வெடிப்பு?' எனக் கேட்டார். வெளியிலிருந்த அனைவரும், காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டார் என சத்தமாக மகிழ்ச்சியுடன் கூறினர்.

அண்ணா மிகக் கோபமாக "பட்டாசு வெடிப்பதை நிறுத்துங்கள்' எனக் கூறி உள்ளே வந்து அங்கு கூடியிருந்த நிருபர்களை பார்த்து, "அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள பெருந்தலைவர் காமராஜரின் தோல்வி எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதல்ல. அரசியல் வானத்தில், இன்னொரு தமிழன், பெருந்தலைவர் காமராஜர் அளவிற்கு உயருவதற்கு இன்னும் ஆயிரமாண்டுகள் ஆகும்' எனக் கூறினார்.

Tags :
|