Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா எதிரொலி ...தனியார் பள்ளிகள் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா எதிரொலி ...தனியார் பள்ளிகள் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசனை

By: vaithegi Tue, 05 July 2022 12:37:09 PM

தமிழகத்தில் கொரோனா எதிரொலி ...தனியார் பள்ளிகள் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசனை

தமிழகம்: தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து, கொரோனா 4வது அலை தொடங்கி உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் உச்சத்தை தொட்டு உள்ளது. இதனால் பொது இடங்கள் மற்றும் நெரிசலான இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது, இதனால் மாணவர்கள் நலன் கருதியும் பள்ளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் நெருக்கமாக அமர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது காலை-மாலை என 2 ஷிப்டாக வகுப்புகளை நடத்தலாமா? என தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. மேலும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

private schools,shift system ,தனியார் பள்ளிகள்,ஷிப்டு முறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறியது, தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒருநாள் விட்டு ஒருநாளாகவோ, காலை மற்றும் மாலை ஷிப்டு முறையிலோ வகுப்பு நடத்தலாமா? என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் பள்ளி முழுமையாக மூட வேண்டிய நிலை வரும். இதனால் முன் எச்சரிக்கையாக தொற்று குறையும் வரை மாணவர்களை பாதியாக குறைத்து வகுப்புகளுக்கு வர வைப்பது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது. மேலும் அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

Tags :