Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகம்

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகம்

By: vaithegi Mon, 20 June 2022 10:56:27 PM

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகம்

தமிழகம்: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றது.

மேலும் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது.

இப்பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார்.

pass rate,government school,private schools,school education ,தேர்ச்சி விகிதம்,அரசு பள்ளி,தனியார் பள்ளிகள்,பள்ளிக்கல்வித்துறை

இந்த வருடம் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை 8,06,277. மேலும் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 7,55,998 (93.76%) ஆகும். இதன் அடிப்படையில் மாணவியர் 4,06,105 (96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,49,893 (90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.36% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மேலும் கடந்த மார்ச் 2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர் 7,99,717 ஆகும். அந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றோர் 7,20,209 ஆகும். தேர்ச்சி விகிதம் 92.3% என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடந்த முறையைவிட இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகம்.

நடப்பு வருடம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் 89.06% தேர்ச்சி , அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கள் 94.87% தேர்ச்சி, தனியார் சுயநிதிப் பள்ளி மாணாக்கர்கள் 99.15% தேர்ச்சி, இருபாலர் பள்ளி மாணாக்கர்கள் 94.05% தேர்ச்சி , பெண்கள் பள்ளி மாணாக்கர்கள் 96.37% தேர்ச்சி, ஆண்கள் பள்ளி மாணாக்கர்கள் 86.60% தேர்ச்சி பெற்றனர். எனவே தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வுகளில் இம்முறை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக பதிவாகி உள்ளது என தெரிகிறது.

Tags :