- வீடு›
- செய்திகள்›
- தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது... வழக்கை வாபஸ் பெற்ற பின் விஜயலட்சுமி பேட்டி
தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது... வழக்கை வாபஸ் பெற்ற பின் விஜயலட்சுமி பேட்டி
By: Nagaraj Sat, 16 Sept 2023 3:37:36 PM
சென்னை: தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் " என்று வழக்கை வாபஸ் பெற்ற பின்னர் நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.
சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ோலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 -ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால் சீமான் ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை.
இதையடுத்து சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார்.இதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர் .
இந்த நிலையில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்று உள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்து திரும்ப பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன்.
தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் " என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.