Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - மெகபூபா முப்தி

காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - மெகபூபா முப்தி

By: Karunakaran Tue, 10 Nov 2020 09:19:54 AM

காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - மெகபூபா முப்தி

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், மெகபூபா 14 மாத காலம் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விடுதலையான பின் முதல்முறையாக ஜம்மு சென்ற மெகபூபா, நேற்று பேட்டி அளிக்கையில், காஷ்மீரில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் இங்கு பயங்கரவாதம் தொடர்ந்து வளர்ந்துவருகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் சராசரியாக 10 முதல் 15 இளைஞர்கள் பயங்கரவாத குழுக்களில் இணைவதாக கூறினார்.

மேலும் அவர், சிறைக்கு செல்வதைவிட, பயங்கரவாத பாதையில் துப்பாக்கி தூக்கி, அதனால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று காஷ்மீர் இளைஞர்கள் நினைக்கிறார்கள். இங்கு, எதிலும் சாராத நடுவழி என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. கருத்துவேறுபாட்டு குரல்கள் கடுமையான அடக்குமுறையால் ஒடுக்கப்படுகின்றன. மத்தியில் பா.ஜ.க.வின் ஆட்சியின்கீழ் காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும் நிலையில், எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம் என தெரிவித்தார்.

india,pakistan,kashmir issue,mehbooba mufti ,இந்தியா, பாக்கிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை, மெஹபூபா முப்தி

எல்லையில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் கவலைப்படுகிறார்கள். எல்லை தாண்டிய இடைவிடாத தாக்குதல்களால் அங்கு உள்ளூர்வாசிகள் எப்போதும் அபாயச் சூழலிலேயே வாழ்கிறார்கள். தங்களின் நிலங்களில்கூட அவர்களால் வேலைபார்க்க முடியவில்லை. இந்நிலையை மாற்ற, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என மெகபூபா கூறினார்.

கார்கில் போர், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றையும் தாண்டி, வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்க்க ஆர்வம் காட்டினார். அதன் விளைவாக, அப்போது காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்தது. எல்லை தாண்டிய தாக்குதலும் நின்றது. பாகிஸ்தானுடனும், ஜம்மு-காஷ்மீரில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். நமது 20 வீரர்களை கொன்ற சீனாவுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேசக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
|