இந்தியை கற்க சொல்வதுபோல் ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
By: Karunakaran Mon, 10 Aug 2020 3:57:03 PM
இந்தியாவில் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்கள் விரைவாக இந்தி கற்றுக்கொள்ளும்போது, மத்திய அரசு பதவிகளில் இந்தி பேசும் நபர்கள் ஏன் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே இந்தியாவின் அலுவலக மொழிகளாக இருப்பதற்கு மத்திய அரசு உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவரை இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் கனிமொழியை நீங்கள் இந்தியரா? என வினவினார்.
இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்தை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியின் விரும்பத்தகாத அனுபவம் அசாதாரணமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.