இந்தி எனும் ஒற்றை மொழி ஆதிக்கமா?... சீமான் கடும் கண்டனம்
By: Nagaraj Wed, 12 Oct 2022 10:29:41 AM
சென்னை: தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர்... பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டுமெனவும், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டுவைக்கும் பேராபத்தாகும்.
இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்
மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை! இந்திக்காரர்கள்
மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை!
இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா?
எதற்கு இந்திக்கு
மட்டும் இத்தகைய முக்கியத்துவம்? அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள
22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்ச
நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை
மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் ஒன்றிய அரசின் செயல்
மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.
ஒரு மனிதனின் சிந்தனை
மேம்பாட்டுக்கும், திறமை வெளிப்பாட்டுக்கும் தாய்மொழி வழிக்கல்வியே உகந்தது
என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு, உலகெங்கும் அதனை
நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பு
முயற்சியானது வெறும் நுகர்வு மந்தைகளாக இந்நாட்டு மக்களை ஆக்குவதற்கான
வேலைத்திட்டமேயன்றி வேறொன்றுமில்லை என்று கூறினார்.