Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எலிகளை பிடிக்க ரூ. 2 ஆயிரம் வரை செலவு; நாகை விவசாயிகள் வேதனை

எலிகளை பிடிக்க ரூ. 2 ஆயிரம் வரை செலவு; நாகை விவசாயிகள் வேதனை

By: Nagaraj Wed, 09 Sept 2020 7:06:19 PM

எலிகளை பிடிக்க ரூ. 2 ஆயிரம் வரை செலவு; நாகை விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை... குறுவை நெற்பயிர்களைக் கடித்துச் சேதப்படுத்தும் எலிகளை ஏக்கருக்கு ரூ.2000 செலவு செய்து, கிட்டி வைத்துப் பிடித்து வருகிறார்கள் நாகை மாவட்ட விவசாயிகள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு, ஆய்மூர், உம்பளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்குப் போதுமான அளவு தண்ணீர் ஆற்றில் வருவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும் செழிப்புடன் வளர்ந்து வருகின்றன. நெற்பயிர்கள் பச்சைப் பசேலென்று வளர்ந்து கதிர்விடத் தொடங்கியுள்ளன.

ஆனால், குறுவை சாகுபடி விளைச்சலைப் பாதிக்கும் வகையில் வயல்களில் எலிகள் அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். வயல் பரப்புகளில் குழி தோண்டி வாய்க்கால்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கதிர்களையும் கடித்து வீணாக்கி வருகின்றன எலிகள். இப்போது எலிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அறுவடை சமயத்தில் பெருகி விளைச்சல் அனைத்தையும் பாழாக்கிவிடும்.

rats,harassment,vulnerability to farmers,action ,எலிகள், தொல்லை, விவசாயிகள் பாதிப்பு, நடவடிக்கை

அதனால் பெருகும் எலிகளைக் கட்டுப்படுத்த, எலி பிடிப்பவர்களைப் பணிக்கு அமர்த்தி. கிட்டிவைத்து எலிகளைப் பிடித்து வருகின்றனர் விவசாயிகள். எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் ஒரு ஏக்கருக்கு ரூ. 2000 வரை விவசாயிகள் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக எலிகளைக் கொல்ல விஷ மருந்துகளும் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால், அதன் மூலம் எலிகள் மட்டுமல்லாமல் எலிகளைக் கொன்று விவசாயிகளுக்கு நண்பனாகத் திகழும் ஆந்தை, பாம்பு உள்ளிட்டவையும் இறந்துவிடும். அதனால், இயற்கையான முறையில் கிட்டி வைத்து எலிகளைப் பிடித்து வருகிறார்கள் விவசாயிகள். கிட்டி என்பது மூங்கில் கழிகளால் செய்யப்படும் ஒருவிதமான எலி பொறியாகும்.

இந்தக் கிட்டிகளுக்கு இடையே எலி செல்லும்போது கிட்டியில் உள்ள மூங்கில் கழிகளுக்கிடையில் எலி சிக்கி இறந்துவிடும். சில ஆயிரம் செலவு செய்தாலும் பரவாயில்லை என்று விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கிட்டி வைத்து வருகின்றனர்.

எலித் தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், “எலிகளைப் பிடிக்க வேளாண்மைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|