Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை இந்த தேதி முதல் நிறுத்த முடிவு

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை இந்த தேதி முதல் நிறுத்த முடிவு

By: vaithegi Tue, 21 Nov 2023 10:12:51 AM

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை இந்த தேதி முதல் நிறுத்த முடிவு


சென்னை: வருவாய் இழப்பு காரணமாக தமிழகம் முழுவதும் நவ.25 முதல் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ...தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, கொழுப்பு சத்து அடிப்படையில் பிரித்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் (4.5% கொழுப்பு சத்து உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்) விநியோகத்தை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்த பால் விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விற்பனை 40 சதவீதம் ஆகும். 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாகவும் இது உள்ளது.

ஆனால் அதேநேரம், அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் தயாரிக்க, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை ஆவின் அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட்டை விநியோகம் செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், தலைநகர் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய புறநகர் மாவட்டங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

aas green milk packet sales,loss of revenue ,ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை,வருவாய் இழப்பு

அதுவும், மிக குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலும் நேரடி ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து கொண்டே வருகிறது. அதற்கு மாற்றாக, 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ‘டிலைட்’ ஊதா நிற பால் பாக்கெட் (சமன்படுத்தப்பட்ட பால்) விநியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியது: தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை நிறுத்தப்பட உள்ளது. தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்களுக்கு டிச.15-ம் தேதி வரை வழங்கப்படும். அதன்பிறகு, அவர்களுக்கும் நிறுத்தப்படும். அட்டைதாரர்களுக்கு பச்சை நிற பாக்கெட்டின் விலைக்கே டிச.1 முதல் டிலைட் பால் அட்டை தரப்படும். டிலைட் பால் விநியோகம் டிச.16 முதல் தொடங்கப்படும் என அவர் கூறினார்.


Tags :