Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற மறைமலை அடிகள்

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற மறைமலை அடிகள்

By: Nagaraj Fri, 15 Sept 2023 7:03:19 PM

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற மறைமலை அடிகள்

சென்னை: கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை பயன்படுத்திய மறைமலை அடிகள் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றவர்.

முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தல எனும் காதல் காவியத்தை தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.

tanitamil movement,hidden steps,questions,classics ,தனித்தமிழ் இயக்கம், மறைமலைஅடிகள், வினாக்கள், செம்மொழி

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது.

தம் வாழ்நாளில் அவரது உள்ளம் இரு விசயங்களை காதலித்தது. அதில் ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமது 75-வது வயதில் காலமானார்.

இவர் காலத்தில் பல புகழ்பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணியம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரை வேலர், திரு.வி.கல்யாணசுந்தரணார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி.கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச.வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியருமான நாராயணசாமி, "சைவ சித்தாந்த சண்டமாருதம்" என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர் என்று பலர் வாழ்ந்த காலம்.

'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக வினாக்களை வீசலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது.

Tags :