வங்கி பண மோசடி தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் கைது
By: Nagaraj Sat, 02 Sept 2023 3:41:07 PM
புதுடில்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் கைது... 538 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில் கனரா வங்கியில் 538 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நரேஷ் கோயலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.