Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாள் பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாள் பிரசாரம்

By: Monisha Mon, 14 Dec 2020 1:15:15 PM

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று 2-வது நாள் பிரசாரம்

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முதல் கட்ட பிரசாரத்தை மதுரையிலிருந்து தொடங்கினார். நேற்று பிற்பகல் சென்னையிலிந்து விமானம் மூலம் மதுரை வந்த கமல்ஹாசனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் விமான நிலையத்திலிருந்து மதுரை பசுமலையில் உள்ள ஓட்டலுக்கு காரில் சென்றார். வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். திறந்த காரில் சென்ற அவர் மீது பூக்களை தூவி வரவேற்றனர்.

இதையடுத்து மாலையில் கமல்ஹாசன் திறந்த காரில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார். பைக்காரா, அழகப்பன் நகர், பழங்காநத்தம், வசந்தநகர், ஆண்டாள்புரம் உள்பட பல பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கமல் ஹாசனை வரவேற்றனர். பின்னர் பெரியார் பேருந்து நிலையம் வழியாக மேலமாசிவீதி, வடக்கு மாசிவீதி சந்திப்புக்கு சென்றார். அங்கு அவரை வரவேற்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து கமல்ஹாசன் உற்சாகமாக கையை அசைத்தார்.

பின்னர் அவர் மதுரை காமராஜர் சாலையிலுள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த மாணவ-மாணவிகளுடனான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதையடுத்து கருப்பா யூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த “சீரமைப்போம் தமிழகத்தை வியூகம்- 2021” என்ற தலைப்பில் கட்சி தொண்டர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் பேசினார்.

kamal haasan,party,election,campaign,tour ,கமல்ஹாசன்,கட்சி,தேர்தல்,பிரசாரம்,சுற்றுப்பயணம்

முதல் நாள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவர் பசுமலையில் உள்ள ஓட்டலுக்கு திரும்பினார். இரவு அங்கு தங்கிய அவர் இன்று 2-வது நாள் பிரசாரத்தை தொடங்கினார். மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள ஒரு ஓட்டலில் வணிகர்கள், மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதையடுத்து வக்கீல்களுடன் கலந்துரையாடினார். பிற்பகலில் உசிலம்பட்டி சென்று அங்கு தேவர் சிலை அருகே பிரசாரம் செய்கிறார். உசிலம்பட்டியில் கட்சி அலுவலகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து தேனி மாவட்டத்துக்கு செல்லும் கமல்ஹாசன் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்கிறார். தேனியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாணவ -மாணவிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து அல்லி நகரம் மற்றும் பெரிய குளத்தில் கமல் ஹாசன் மக்களை சந்திக்கிறார்.

பின்னர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகிலும், செம்பட்டி பேருந்து நிலையம் மற்றும் திண்டுக்கல் பேகம்பூர், ஆர்.எம்.காலனி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு அங்குள்ள தனியார் மகாலில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதன் தொடர்ச்சியாக நாளை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். 16-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தனது முதல் கட்ட பிரசாரத்தை அவர் நிறைவு செய்கிறார்.

Tags :
|