Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு விடுதலை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு விடுதலை

By: Nagaraj Mon, 22 June 2020 6:01:31 PM

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தைக்கு விடுதலை

உடுமலை சங்கர் கொலை வழக்கு... உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ததோடு, அவரை விடுதலை செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கூலிப்படையை சேர்ந்த 5 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கரை கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே கடந்த 2016 மார்ச் 13ம் தேதியன்று உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே கூலிப்படை கும்பல் அவர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்து விட, படுகாயமடைந்த கவுசல்யா மட்டும் மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தார்.

supreme court,appeal,kausalya,shankar,murder case ,உச்சநீதிமன்றம், மேல்முறையீடு, கவுசல்யா, சங்கர், கொலை வழக்கு

இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டனர்.

மரண தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், சுமார் 327 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

supreme court,appeal,kausalya,shankar,murder case ,உச்சநீதிமன்றம், மேல்முறையீடு, கவுசல்யா, சங்கர், கொலை வழக்கு

வழக்கின் முதல் எதிரியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி மீதான குற்றச்சாட்டுகள் காவல் துறை தரப்பில் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்த நீதிபதிகள், சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக்கி, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதோடு, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.

அதே போல் கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும், அவர்கள் குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது சிறையில் இருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு எவ்வித தண்டனை குறைப்பும் இருக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

அதே போல் தன்ராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனை மற்றும் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும் ரத்து செய்த நீதிபதிகள் இருவரையும் விடுதலை செய்வதாகவும் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டதும் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தமிழக அரசின் ஆலோசனை படி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எமிலியாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
|