Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைதி நிலவ ஆக்கிரமிப்பு இல்லாமை அவசியம் - ராஜ்நாத்சிங்

அமைதி நிலவ ஆக்கிரமிப்பு இல்லாமை அவசியம் - ராஜ்நாத்சிங்

By: Karunakaran Sat, 05 Sept 2020 09:09:27 AM

அமைதி நிலவ ஆக்கிரமிப்பு இல்லாமை அவசியம் - ராஜ்நாத்சிங்

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ள ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று அங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சீன ராணுவ மந்திரி வெய் பெங்கேவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளில் உலக மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம்பேர் வசிக்கிறார்கள். இத்தகைய பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலவ வேண்டுமானால், நம்பிக்கை, ஒத்துழைப்பு, ஆக்கிரமிப்பு இல்லாமை, சர்வதேச விதிமுறைகளை மதித்தல், கருத்து வேறுபாடுகளுக்கு அமைதி தீர்வு காணுதல், மற்றவர்களின் நலன்களை மதித்தல் ஆகியவை அவசியம் என்று கூறினார்.

peace,aggression,rajnath singh,china ,அமைதி, ஆக்கிரமிப்பு, ராஜ்நாத் சிங், சீனா

இந்த ஆண்டு, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததன் 75-வது ஆண்டாகும். ஒரு நாடு, இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தால், எல்லோருக்குமே அழிவு ஏற்படும் என்பதுதான் இரண்டாம் உலகப்போரின் நினைவுகள் நமக்கு பாடம் கற்பிக்கின்றன. பாரசீக வளைகுடா நாடுகளில் நிலவும் சூழ்நிலை இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. அந்த நாடுகள், பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ராஜ்நாத்சிங் கூறினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்துக்குப்பின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாஸ்கோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சீன ராணுவ மந்திரி வெய் பெங்கை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாட்டு ராணுவ மந்திரிகளின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விவகாரங்கள்ஏதும் வெளியாகவில்லை.

Tags :
|