பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கை; ரிசாட் பதியுதீன் தகவல்
By: Nagaraj Thu, 30 July 2020 6:33:25 PM
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டதாக தெரிவித்தே சில ஊடகங்கள் இன்றைய தினம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும் இது அப்பட்டமான பொய்.
தேர்தல் நெருங்குகின்ற நேரம் பார்த்து இவ்வாறான ஒரு பொய்யினைச் சொல்வதன் ஊடாக, தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு செய்யப்படுகின்ற ஒரு சதியாகவே இதனைப் பார்க்கின்றோம்.
நான் என்னுடைய ஒரு ரூபாய் பணத்தினையும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு
பயன்படுத்தவில்லை. சஹ்ரான் உட்பட இந்த பயங்கரவாதத்துடன் தொடர்புடைய
யாரையும் எனக்கு தெரியாது. ஒருவரைத் தவிர. இன்சாப் இப்ராஹீம் அஹமட் என்ற
வியாபாரியினைத் தவிர வேறு ஒருவரையும் எனக்கு தெரியாது.
இந்தநிலையில்
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இவ்வாறான ஒரு விடயத்தினைத் தெரிவித்திருந்தால் அதனை
அவர் உடனடியாக வாபஸ் பெற்று உண்மையினை இந்த நாட்டிற்கு சொல்ல வேண்டும்.
அவ்வாறு அவர் சொல்லாவிட்டால். ஒரு வாரத்திற்குள் அவர் அதனைச்
செய்யாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன“ எனக் குறிப்பிட்டுள்ளார்.