காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாயம்
By: Monisha Sat, 26 Dec 2020 08:31:47 AM
காற்று மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வட சென்னை பகுதிகளில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சி.பி.சி.எல்., தமிழ்நாடு பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், மெட்ராஸ் உரத் தொழிற்சாலை ஆகிய 6 நிறுவனங்கள் தொடர்ந்து விதிகளை மீறுவதால் வடசென்னை பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்காக எடுத்து விசாரித்தது.
வழக்கின் முடிவில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- "வடசென்னை பகுதியில் மாசு ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் ஆகியோர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக்குழு காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து பிப்ரவரி 15-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளது.