போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்... பிரதமர் ஷெரிப் தகவல்
By: Nagaraj Thu, 18 May 2023 1:31:37 PM
பாகிஸ்தான்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்... இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஷெரிப் தலைமையில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தினை தொடர்ந்து குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9ஆம் திகதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களினால் பாகிஸ்தான் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.